கச்சா எண்ணெய் Pt web
உலகம்

ஈரான் - அமெரிக்கா | 2 வார போர் நிறுத்தம் அமல்.. கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி!

ஈரானுடனான போரை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிந்துள்ளது.

Premkumar S

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 1 மாதத்திற்குய் மேலாக நடந்து வரும் நிலையில், ஈரான் உச்சத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் தான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான்.. உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிவைத்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கும் மேலே சென்றது. இதன்காரணமாக, உலக அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

ஈரான் - ஹார்முஸ் நீரிணை

இதையடுத்து, ஹார்முஸை திறக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கை அடங்கிய தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்க முன்மொழிந்த நிலையில், அதனை ஈரான் தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஹார்முஸைத் திறக்காவிடில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்திருந்த ட்ரம்ப். முதற்கட்டமாக 2 நாட்கள் ஈரானுக்கு கெடு விதித்திருந்தார். ஈரானின் ஒத்துழைப்பு காரணமாக, மேலும் 10 நாட்களுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தார் எனினும் ஈரான் தொடர்ந்து இதை மறுத்து வந்தது.

இந்த சூழலில் தான், நேற்றைய முன் தினம் ஹார்முஸைத் திறக்க ஈரானுக்கு 24 மணி நேரம் கெடு விதிப்பதாகவும், இதுவே கடைசி கெடுவாக இருக்கும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தக் கெடு நேற்று இரவு 8 மணியுடன் (இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி) நிறைவடைய இருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானின் 10 கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொள்கிறேன். ஹார்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க ஈரான் முன்வந்துள்ளது. சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தவுள்ள நிலையில் 2 வாரங்களுக்கு ஈரான் மீதான போரை நிறுத்தப்போகிறேன் என புதிய அறிவிப்பொன்றை ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஈரான் அமெரிக்க போர்

தொடர்ந்து, ஈரானும் அமெரிக்கவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்திருக்கிறது. இடைக்கால போர் நிறுத்தத்தை 3 நாடுகளும் உறுதிபடுத்தியுள்ளதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயன் விலை கிட்டத்தட்ட 18% விலை குறைந்து வருகிறது. ஈரான் - அமெரிக்க மோதலால், 1 பீப்பாய் கச்சா எண்ணெய் 110-க்கும் மேல் உயர்ந்திருந்தது. இந்த சூழலில், இந்த இடைக்காலப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, 100 டாலருக்கும் கீழ் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. மேலும், இந்தப் போர் நிறுத்தத்தால், ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து சகஜமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இந்தப் போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானதாகவே இருக்கிறது.  நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை வருகிற ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின் மூலமே, நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுமா அல்லது இந்தப் போர் மீண்டும் தொடருமா என்பது முடிவுக்கு வரும்.