உலக பிரபல குங்ஃபூ நாயகன் சோவ் யன்-ஃபட் தனது சொத்தில் 5,000 கோடிக்கு மேல் ஏழை, எளிய மக்களுக்கு தானம் செய்துள்ளார்.
ஹாங்காங் நாட்டை சேர்ந்த பிரபல சினிமா நடிகர் சோவ் யன்-ஃபட். இவருக்கு தற்போது 63 வயது ஆகிறது. கரேபியன் கல்லறைத் தீவு, ஹைடன் ட்ராகன் உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் உலக அளவில் பெறும் வெற்றியைப் பெற்றன. கடந்த 2015ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, அதிக வருமானம் பெறும் சினிமா நடிகர்கள் பட்டியலில் சோவ் 24ஆம் இடம் பிடித்திருந்தார். ஆயிரக்கணக்கான கோடிகளை இவர் சம்பாதித்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் எளிமையான வாழ்வையே சோவ் வாழ்ந்து வந்தார்.
அரசுப் பேருந்தில் மக்களுடன் பயணிப்பது, திரையரங்குகளில் வரிசையில் நின்று தனது படத்தை அவரே பார்ப்பது ஆகியவை அவரது எளிமையான வாழ்வில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்நிலையில் சோவ் தனது சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயிலை எழுதியுள்ளார். அதில் தான் இறந்த பிறகு 5000 கோடிக்கு மேலான தனது சொத்துக்களை, ஏழைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
‘தி கிவ்விங் ப்லெட்ச்’ என்ற அந்தத் தொண்டு நிறுவனம் ஏழைகளுக்கு தொண்டு செய்வதற்காக பில்கேட்ஸ் மற்றும் வார்ரன் பஃப்பெட் ஆகியோரால் தொடங்கப்பட்டதாகும். தனது தானம் தொடர்பாக பேசிய சோவ், “இந்தப் பணம் எப்போதும் நம்மோடு வரப்போவதில்லை. ஒரு நாள் நீங்கள் சென்றுவிட்டால், மற்றவர்கள் தான் அதை பயன்படுத்துவார்கள். நீங்கள் இறந்த பின்னால் உங்கள் வங்கிக்கணக்கில் இந்தப் பணத்தையெல்லாம் வைத்துக்கொள்ள முடியாது. எனது இந்தத் தானம் செய்யும் முடிவிற்கு எனது மனைவி முழு சம்மதம் தெரிவித்து, ஆதரவளித்துள்ளார்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அவரது மனைவி ஜாஸ்மின் டென் கூறும்போது, “எனது கணவர் முன்பெல்லாம் சாலையோர கடைகளில் சாப்பிட்டுள்ளார். சாதாரண நோக்கியா ஃபிலிப் போனை தான் அவர் நீண்ட வருடங்களாக பயன்படுத்தினார். இந்தத் தானத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியே” எனக் கூறியுள்ளார்.