கொரோனா வைரஸுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் புதின் அண்மையில் அறிவித்திருந்தார். பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஒன்பது விதமான இறுதிகட்ட மருத்துவ ஆய்வில் இல்லை என தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம்.
‘ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசி எந்தளவுக்கு கொரோனாவை தடுக்க உதவும் என்பது குறித்த எங்களது முடிவை இப்போதைக்கு அறிவிக்க முடியாது. அந்த மருந்து குறித்த எந்த விவரமும் இல்லாதது தான் இதற்கு காரணம்’ என தெரிவித்துள்ளார் உலக சுகாதாரமையத்தின் மூத்த ஆலோசகரும் மருத்துவருமான புரூஸ் அய்ல்வர்ட்.