முதல்முறையாக அதாவது ஜூன் மாதத்திற்குப் பிறகு பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 65 அமெரிக்கர்களில் ஒருவருக்கு கொரோனா பாஸிட்டிவ் இருப்பதாகக் கூறப்படுகிறது. லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் ஒரு லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. மேலும், ஏழு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளில் மிகவும் கவனமாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 19 உயிரிழந்திருப்பது கவலையளித்துள்ளது.
மெல்போர்ன் நகரில் கொரோனா தீவிரமாக பரவிவருகிறது. அங்குள்ள நகர நிர்வாகம் நோய்த் தொற்றைத் தடுக்க கடுமையாக போராடிவருகிறது. அங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. செப்டம்பர் 13 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்திய முதல் நாடாக முன்னணியில் இருந்த ஆஸ்திரேலியா தற்போது நோயைத் தடுப்பதில் பெரும் போராட்டங்களைச் சந்தித்துவருகிறது.