உலகம்

அமெரிக்காவில், மலையில் இருந்து விழுந்த கேரள சாகச ஜோடி உடல்கள் மீட்பு

அமெரிக்காவில், மலையில் இருந்து விழுந்த கேரள சாகச ஜோடி உடல்கள் மீட்பு

webteam

அமெரிக்காவில், 800 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கேரள சாகச ஜோடியின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கேரளா மாநிலம் கன்னூரைச் சேர்ந்தவர் டாக்டர் விஸ்வநாதன். இவர் மனைவி சுகாசினி. இவரும் டாக்டர். கதிரூரில் உள்ள ஸ்ரேயாஸ் மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். இவர் மகன் விஷ்ணு. இவர் செங்கானூரில் உள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் படித்தார். இவருடன் படித்தவர் கோட்டயத்தை சேர்ந்த மீனாட்சி. இருவரும் காதலித்தனர். பின்னர் கடந்த வருடம் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் வேலைக்காக அமெரிக்கா சென்றுவிட்டனர். அங்கு வேலை செய்துகொண்டே, பல்வேறு பகுதிகளுக்கு சென்று சாகசத்தில் ஈடுபட்டுள் ளனர். உயரமான இடங்களுக்கு சென்று செல்ஃபி எடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர். பின்னர் அந்த சாகச அனுபவத்தை தங்களது வலைப்பதிவில் எழுதி வந்துள்ளனர். அதோடு தங்களது பெற்றோருக்கும் வாட்ஸ் ஆப்-பில் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய கலிபோர்னியாவில் உள்ள யாஸ்மிடே தேசிய பூங்காவுக்குச் சென்றனர். அது மிகவும் உயரமான மலைகள், அருவிகளைக் கொண்ட இடம். சுற்றுலாத்தலமான இங்கு பலர் டிரெக்கிங் செல்வதும் வழக்கம். பயங்கரமான இந்த பகுதியில், 800 அடி உயர மலை மீது விஷ்ணு, மீனாட்சி ஆகியோர் ஏறி சுற்றிப் பார்த்தனர்.

பின்னர் மலை உச்சியின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி 800 அடி பள்ளத்தில் விழுந்தனர். இதில் அவர்கள் உடல் சிதைந்து உயிரிழந்தனர். 

இதுபற்றி கடந்த சனிக்கிழமை கேரளாவில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தேசிய பூங்காவில் இருந்து அவர்கள் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடல் சிதைந்து அழுகிய நிலையில் இருப்பதால் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.