நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதற்கிடையே ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு இப்படி இருக்க, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பிற நாடுகளில் ஊரடங்கு எத்தனை நாட்களாக இருக்கிறது?
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் ஜனவரி 23ஆம் தேதி முதல், ஏப்ரல் 7ஆம் தேதி வரை 76 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. கொரோனா பாதிப்பில் தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டிருக்கிறது. குறிப்பாக நியூயார்க்கில் மார்ச் 20ஆம் தேதி முதல் வரும் 29ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டில், மார்ச் 14ஆம் தேதி முதல் வரும் 11ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தாலியில் கடந்த மாதம் 9ஆம் தேதியில் இருந்து, வரும் 13ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் 17ஆம் தேதியில் இருந்து வரும் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் மார்ச் 20ஆம் தேதி முதல் வரும் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் வரும் 13ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
பெல்ஜியம் நாட்டில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் வரும் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அண்டை நாடான சிங்கப்பூரில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.