கொரோனா வைரஸ் மருந்தை பரிசோதிக்கும் பணி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இன்று தொடங்க உள்ளது
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் 80,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,213 ஆக அதிகரித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் மருந்தை பரிசோதிக்கும் பணி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இன்று தொடங்க உள்ளது. வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை நடைபெற உள்ளது என்றும், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் இதற்கான நிதியை வழங்கியுள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான 45 இளைஞர்களிடம் மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளது. பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ளவே முதற்கட்ட பரிசோதனை செய்யப்படுவதாகவும், ஒரு மருந்து குறித்த முழு பரிசோதனை முடிய ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வின்போது பரிசோதிக்கப்படும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.