சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிலும் முதல் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்தது. அதன்பின் வேகமெடுத்த இந்த வைரஸ் தற்போதுவரை 1,355பேரின் உயிரைப் பறித்துள்ளது. இதுவரை 60,015 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சீனாவைச் சேர்ந்தவர்கள் 48,206 பேர் ஆவர். ஹூபே மாகாணத்தில் மட்டும் ஒரே நாளில் 242 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாத இறுதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என சீன அரசு அறிவித்துள்ளது. ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார வல்லுநர்கள், கொரோனா வைரஸை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை எனில் பேரழிவை ஏற்படுத்திவிடும் என எச்சரித்துள்ளனர். சீனாவில் 60 சதவீதம் பேரை கொரோனா தாக்கக்கூடும் என நியூயார் டைம் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஷாங்காய் நகரில் ஏப்ரல் மாதம்19 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சர்வதேச கார்பந்தய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இம்மாதம் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை உலக மொபைல் மாநாடு நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்கவிருந்த நோக்கியா, வோடாபோன், டாய்ச் டெலிகாம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கொரோனா வைரஸ் அச்சத்தால் மாநாட்டிலிருந்து விலகிய நிலையில் அந்த மாநாடும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் திட்டம் குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டியிடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு கொரோனா இல்லை என்பதை கமிட்டி உறுதி செய்த பின்னரே அவர்களை அனுமதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.