கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவிலிருந்து உக்ரைன் சென்ற பேருந்து ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுகானிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சத்தில் தள்ளியுள்ளது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ள இந்த கொரோனா வைரஸால், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வாழும் சீன மக்களை இந்த கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இந்நிலையில், சீனாவின் வுகானிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வந்த போலி மின்னஞ்சலே இந்த தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சீனாவின் வுகான் நகரில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உக்ரைன் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்துவதற்காக மருத்துவமனைக்கு பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்டபோது சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
45 உக்ரைன் நாட்டவர்களும், 27 வெளிநாட்டவர்களும் பயணித்த அந்த பேருந்தின் மீது கற்களையும், தீப்பந்தங்களையும் எறிந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புப்படையினர், பேருந்திற்கு வழிவிட உதவினர். இந்த நிலையில் பதட்டத்தை குறைப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுடன் தான் தங்கவிருப்பதாக உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.