உலகம்

“எனக்கு காய்ச்சல் மட்டும்தான்; கொரனோ பாதிப்பு இல்லை”- சீனாவில் தவிக்கும் இந்திய மணப்பெண்..!

“எனக்கு காய்ச்சல் மட்டும்தான்; கொரனோ பாதிப்பு இல்லை”- சீனாவில் தவிக்கும் இந்திய மணப்பெண்..!

webteam

சீனாவில் சிக்கியுள்ள ஆந்திர மணப்பெண் ஒருவர் தனக்கு கொரனோ வைரஸ் இல்லை எனவும் தன்னை உடனே மீட்டுச் செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் பண்டி ஆத்மகூரு மண்டலம் ஈர்னபாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் 18-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இதனிடையே பணி நிமித்தமாக சீனாவில் உள்ள வுஹானுக்கு அனுப்பப்பட்டார் ஜோதி. இந்த நிலையில் சீனாவில் கொரனோ வைரஸ் பாதிப்பால் இந்திய அரசு அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்தது. இதில் பலர் இந்தியா திரும்பியுள்ள நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் சிக்கிக்கொண்ட ஜோதி வீடியோ மூலம் தனக்கு கொரோனா வைரஸ் இல்லை எனவும் அதனால் தன்னை மீட்டுச் செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

தொடர்ந்து 2-வதாக சென்ற விமானத்தில் ஜோதியும் இந்தியா புறப்படத் தயாரானார். அப்போது அவருக்கு காய்ச்சல் அதிகம் இருந்ததால் சீன அரசு அவரை இந்தியா அனுப்ப மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஜோதி நேற்று மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “ எனக்கு காய்ச்சல் மட்டும்தான் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே உடனடியாக என்னை இங்கிருந்து மீட்டுச் செல்லுங்கள்” என கோரிக்கை வைத்துள்ளார்.