சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கவுட்டா பகுதியில் அரசுப் படையின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நச்சு வேதிப் பொருள் மூலம் நடத்தப்படும் தாக்குதலால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக குழந்தைகள் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நாள்தோறும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
சிரியாவின் கவுட்டா நகரில் அரசுப் படைகளும், ரஷ்யாவும் இணைந்து நடத்தும் தாக்குதலுக்கு கொத்துக் கொத்தாக உயிர்கள் மடிந்துள்ளன. ஏவுகணைகள், வானில் இருந்து வீசப்படும் குண்டுகள், ஹெலிகாப்டர்களில் இருந்து எறியப்படும் வெடிமருந்து நிரப்பப்பட்ட பீப்பாய்கள் போன்றவையெல்லாம் குழந்தைகளையும் சேர்த்தே கொன்று குவிக்கின்றன. கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் சுமார் 150 குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைகள் காயமடைந்து சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இன்னும் பலர் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக நிற்கின்றனர். கண்முன்னே சகோதரர்களையும் நண்பர்களையும் இழக்கும் குழந்தைகள் பேதலித்து திரிகிறார்கள்.
கவுட்டாவில் ஆங்காங்கே சேகரித்து வைக்கப்படும் குழந்தைகளின் சடலங்கள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. இன்றைக்கு கவுட்டாவில் பள்ளிக்கூடங்கள் எதுவும் இயங்கவில்லை. கிளர்ச்சியாளர்களை மட்டுமே தேடி அழிப்பதாக அரசுப் படைகள் கூறுகின்றன. ஆனால், வீசப்படும் பீப்பாய் குண்டுகளும், நச்சுப் புகைக் குண்டுகளும் கிளர்ச்சியாளர்களுக்கும் குழந்தைகளுக்கும் பேதம் பார்ப்பதில்லை. எவ்விதமான அழுகுரலுக்கும் செவிசாய்ப்பதில்லை. பெற்றோருடன் சேர்த்தே உயிரைப் பறித்துவிடுகின்றன. தன்னார்வ அமைப்புகளின் ஆம்புலன்ஸ்களும், முகாம்களும்கூட தாக்குதல்களுக்குத் தப்புவதில்லை.
உருக்குலைந்து போயிருக்கும் கவுட்டாவின் கட்டடங்களுக்கு அடியிலும் ஏக்கம் நிறைந்த குழந்தைகளைப் பார்க்க முடிகிறது. சில மீட்டர் தொலைவில் வெடித்துச் சிதறும் குண்டுகளின் அதிர்வுகளை உணர்ந்தபடியே இந்தக் குழந்தைகள் நாள்களைக் கழித்து வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக கவுட்டா முழுவதும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களின் உயிரைப் பணயம் வைத்தே ரஷ்யாவும் சிரியாவும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன.