உலகம்

சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரமாண்ட கப்பல்: தொடரும் அப்புறப்படுத்தும் முயற்சி!

Sinekadhara

எகிப்து அருகே உள்ள சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரமாண்ட சரக்கு கப்பலை அகற்ற 5ஆவது நாளாக தொடர்ந்து முயற்சி நடைபெற்றுவருகிறது. இதனால் உலக நாடுகளிடையே சரக்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

சூயஸ் கால்வாயை குறுக்கும் நெடுக்குமாக அடைத்தபடி தரைதட்டி நிற்கிறது எவர் கிவ்வன் (எவர் க்ரீன்) என்ற பெயர் கொண்ட சரக்குக் கப்பல். ராட்சத எஞ்சின்களைக் கொண்ட இழுவைப் படகுகள் எவர் கிவ்வன் கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கரையை ஒட்டிய தரைப்பகுதியில் கப்பல் தரைதட்டியிருப்பதால், சகதியை அகற்றியும், தரையை ஆழப்படுத்தியும் கப்பலை நகர்த்துவதற்கான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எவர் கிவ்வன் கப்பல் நானூறு மீட்டர் நீளமும் இரண்ட லட்சத்துப் பத்தொன்பதாயிரம் டன் எடையும் கொண்டது. உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களுள் ஒன்று. அதனால் அதை மீட்கும் பணி சவாலானது என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஓரிரு வாரங்கள்கூட ஆகலாம் என மதிப்பிடுகிறார்கள். 5ஆவது நாளாக இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனால் உலக நாடுகளிடையே சரக்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமையன்று சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த எவர் கிவ்வன் கப்பல், சூயஸ் கால்வாயின் தெற்குப் பகுதியில் கரையில் தட்டி நின்றது. பலமான காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்து கப்பல் கரையில் மோதி நின்றது.

ஒரு கால்வாய் அடைபட்டுப் போனால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைத்துவிடக் கூடாது. அடைபட்டிருப்பது சூயஸ் கால்வாய். பொருளாதாரத்தையும், புவியியலையும் அறிந்தவர்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவும் மிகவும் அற்புதமான கட்டுமானம் இதுதான் என்கிறார்கள்.

செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் இந்தக் கடல்வழி 193 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது இல்லாவிட்டால் இந்தியப் பெருங்கடலில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் கப்பல்கள் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை சுற்றிச் செல்ல வேண்டும். பயணக் காலம் இரண்டு வாரங்கள் கூடுதலாகும்.

சூயஸ் கால்வாய் வழியேதான் உலகின் 12 சதவிகித வர்த்தகம் நடைபெறுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 50 கப்பல்கள் கடந்து செல்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வழி அடைபட்டிருப்பதால், நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தவித்து நிற்கின்றன. இதனால் நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

பொருளாதார மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட காரணத்தினாலேயே, உக்கிரமான போர்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது சூயஸ் கால்வாய். அரசியலை மாற்றியிருக்கிறது. வல்லரசுகளை வீழ்த்தியிருக்கிறது. இப்போதைய நிகழ்வுகளும் பெருஞ்சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்.