அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஹெதர் மற்றும் ரைலி ஆகியோருக்கு கடந்த 2016-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. எரின் டெலானி மற்றும் அப்பி டெலானே எனப் பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைகளின் தலையின் மேல் பகுதி ஒட்டியப்படி இருந்தது. இந்நிலையில், இந்தக் குழந்தைகளை பிரிக்க அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 7 ஆம் தேதி நரம்பியல் துறை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் கைத்தேர்ந்த மருத்துவர்கள் தலைமையில் 30 பேர் கொண்ட குழு, 11 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, இரண்டு தலைகளையும் வெற்றிகரமாகப் பிரி்த்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, வெற்றிகரமாக குழந்தைகளின் தலை பிரிக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். லட்சத்தில் ஒரு குழந்தை தான் இவ்வாறு பிறக்கும் என தெரிவித்தனர்.