உலகம்

பாலஸ்தீனர்கள்- இஸ்ரேல் காவல்துறை இடையே மோதல்: ஏராளமானோர் காயம்

பாலஸ்தீனர்கள்- இஸ்ரேல் காவல்துறை இடையே மோதல்: ஏராளமானோர் காயம்

Sinekadhara

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் காவல்துறையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதி அமைந்துள்ள இடம் தங்களது புனிதத்தலம் இருந்த இடம்தான் என இஸ்ரேல் நாட்டின் யூதர்கள் நம்புகின்றனர். இதனால் இங்கு இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படும். இங்கு அதிகாலையில் காவல்துறையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மசூதிக்குள் ஏராளமாக கற்கள் குவிக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை அகற்றுவதற்காக மட்டுமே காவல்துறை மசூதி வளாகத்திற்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது.

வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பின்னரே வளாகத்திற்குள் நுழைந்ததாக இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளே நுழைந்த காவல்துறையினர் மீது பாலஸ்தீன இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்கியதாக சாட்சிகள் சிலர் தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பிரயோகித்தனர். இதில் 152 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். அங்கு வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோரை கைது செய்திருப்பதாகவும் இஸ்ரேல் காவல்துறை அறிவித்துள்ளது. மசூதி வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு, யூதர்களின் பாஸோவர், கிறிஸ்தவர்களின் புனித வாரம் அனைத்தும் ஒரே நேரத்தில் வருகின்றன. இதனால் மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். இதுபோன்ற நேரத்தில் அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது. மேலும் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.