trump, nobel PT web
உலகம்

7 போர்கள் தடுத்து நிறுத்தம்.. ஆதரவுக்கரம் நீட்டும் நாடுகள்.. ட்ரம்புக்கு நோபல் கிடைக்குமா?

விரைவில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அது ட்ரம்ப்க்கு வழங்கப்படுமா என்கிற விவாதங்களும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

Prakash J

விரைவில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அது ட்ரம்ப்க்கு வழங்கப்படுமா என்கிற விவாதங்களும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

நோபல் பரிசும்... ட்ரம்பின் பேச்சும்

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் 10ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமைதிக்கான நோபல் தனக்குக் கிடைக்காது என ஆரம்பத்தில் கூறிவந்த ட்ரம்ப், தற்போது அதை தனக்குக் கொடுங்கள் என மறைமுகமாகக் கேட்கத் தொடங்கிவிட்டார். அதற்காக, தனக்கு வழங்கும்படி அவர் பல நாடுகளை வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

trump

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அவர், இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், கொசோவோ-சொ்பியா, காங்கோ-ருவாண்டா, எகிப்து-எத்தியோப்பியா, ஆா்மீனியா-அஜா்பைஜான் நாடுகளுக்கு இடையிலான போா்களை நிறுத்தியதாகத் தொடர்ந்து கூறிவருகிறார். அதிலும் இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தியதாக, இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை கூறியுள்ளார். மேலும், உக்ரைன் - ரஷ்யா மற்றும் காஸா - இஸ்ரேல் இடையே போரை நிறுத்துவதற்கு தாம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதன் காரணமாகவும் தனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட வேண்டும் என அவர் சமீபகாலமாகத் தெரிவித்து வருகிறார். இதையடுத்து, ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா, அர்மேனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அது தொடர்பாக நோபல்கமிட்டிக்கு பரிந்துரைக் கடிதங்களையும் அவர்கள் அனுப்பியுள்ளனர். விரைவில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அது ட்ரம்ப்க்கு வழங்கப்படுமா என்கிற விவாதங்களும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

நிபுணர்கள் சொல்வது என்ன?

இதுதொடர்பாக சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட்-இப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 76 சதவீத அமெரிக்கர்கள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்லத் தகுதியற்றவர் என்று நம்புவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 22 சதவீதம் பேர் மட்டுமே அவருக்கு அந்த விருது இருப்பதாகக் கூறுகின்றனர். மறுபுறம், அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என தகவல் உறுதியாகி உள்ளது. இதுகுறித்து நோபல் கமிட்டிக் குழுவினர் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்..

nobel prize

இதுகுறித்து நாா்வேயின் அமைதி ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் நீனா கிரேகா், “நோபல் பரிசு உருவாகக் காரணமான ஆல்ஃபிரட் நோபல் உயிலின்படி, உலக நாடுகளுக்கு இடையே நட்புணா்வை அதிகரிக்க அளப்பரிய அல்லது மிகச் சிறப்பாகப் பணியாற்றியவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். ஆனால், ட்ரம்ப் அவ்வாறு செய்யவில்லை”எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பாரீஸ் பருவநிலை மாற்றம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது. அவற்றில் இருந்து விலக ட்ரம்ப்தான் முடிவு செய்தாா். அமெரிக்காவின் நட்பு மற்றும் கூட்டாளி நாடுகள் மீது அவா் வா்த்தகப் போரைத் தொடுத்துள்ளாா். இது அமைதியை விரும்பும் அல்லது ஊக்குவிக்கும் அதிபருக்கு எடுத்துக்காட்டு அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைதிக்கான நோபல் பரிசு தோ்வுக் குழுவின் துணைத் தலைவா் ஆஸ்லே டோஜே, “நோபல் பரிசுக்குத் தன்னை பரிந்துரைக்குமாறு அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளிடம் அவா் வலியுறுத்துகிறாா். அந்தப் பரிசு வேறு யாருக்காவது வழங்கப்பட்டால், பரிசு வழங்குவதில் பாரபட்சம் நிலவுவதாகப் புகாா் தெரிவிக்கிறாா். இத்தகைய செயல்கள் ஒருவருக்கு சாதகமாக இருப்பதைவிட பாதகமாகவே முடியும். எங்கள் தோ்வுக் குழு எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாகப் பணியாற்றவே விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்

இவ்விவகாரம் தெரிவித்து நோபல் பரிசு வரலாற்றாசிரியா் ஆஸ்லே ஸ்வீன், “காஸா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் உள்ளாா். அத்துடன் உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷ்ய அதிபா் விளாடிமிர் புதினுடன் நல்லுறவை ஏற்படுத்த ட்ரம்ப் விரும்புகிறாா். இதுபோன்ற காரணங்களால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் கடந்த காலங்களில் ஆச்சரியப்படும் வகையில் 1973இல் கிஸ்ஸிங்கர், 2009இல் ஒபாமா, 1991இல் சூகி உள்ளிட்டோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.