காக்னிசன்ட் நிறுவனம், ஊழியர்களின் செயல்திறனை கண்காணிக்க ProHance எனும் பயன்படுத்தி வருகிறது. 5 நிமிடங்களுக்கு மேல் மவுஸ் அல்லது கீபோர்டு செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் செயலற்று உள்ளதாக கருதப்படுகிறார். இது ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக அல்ல, பொதுவான தொழில் நடைமுறையாகும் என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் கொரோனா பொது முடக்கம் மற்றும் அதற்குப் பிறகான ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சி எனப் பல்வேறு விஷயங்களின் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது. அதேநேரம், ஊழியர்களைக் கண்காணிக்கும் பணியில் சில ஐ.டி. நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் (COGNIZANT), தனது ஊழியர்கள் பணி செய்கிறார்களா என்பதை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது. இதற்காக, 'ProHance' போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது. ProHance போன்ற ஒரு கருவி ஒரு ஊழியர் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தைக் கண்காணிக்கிறது. ஊழியர் பணியாற்றும் ஆபீஸ் கணினிகளில், மவுஸ் அல்லது கீ போர்டு 5 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் செயலற்று உள்ளதாக கருதப்படுகிறார். அதாவது, அவர் சும்மா இருப்பதாக குறிக்கப்படுவார் என அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாக கருதப்படுகிறார். இந்த கண்காணிப்பு அமைப்பு ஒவ்வொரு டீமுக்கும் வித்தியாசமாக இருக்கும்.
இந்த செயல்முறை விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த கண்காணிப்பு தரவு, ஒரு பொதுவான தொழில் நடைமுறையாகும் என்றும், ஊழியர் செயல்திறனை மதிப்பிடவும், பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. புதிய கருவிக்கு ஒப்புதல் அளித்த பின்னரே ஊழியர்கள் ProHance வழியாக கண்காணிக்கப்படுவார்கள் என்று Cognizant கூறுகிறது. இருப்பினும், ProHance கற்றுக்கொள்வதற்கான பாடத்திட்டம் (course) பயிற்சி பாடத்தின் (training course) ஒரு பகுதியாக இருந்தது என்று சில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்தப் பயிற்சி, உற்பத்தி நேரம், ஒவ்வொரு பணிக்கும் செலவழிக்கும் நேரம், குறிப்பிட்ட செயலிகளில் பதிவு செய்யப்படும் பணிநேரம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை உள்ளடக்குகிறது. இடைவேளைகள் இருந்தபோதிலும் ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட மணிநேரம் வேலை செய்வதை உறுதி செய்வதே இந்த மேம்படுத்தப்பட்ட கண்காணிப்புக்குப் பின்னால் உள்ள காரணம் என்று அறிக்கை கூறுகிறது. காக்னிசன்ட் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் அதிக உற்பத்தித்திறனைப் பெற விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஊழியர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க ProHance போன்ற கருவியைப் பயன்படுத்தும் ஒரே நிறுவனம் காக்னிசன்ட் மட்டுமல்ல. விப்ரோ போன்ற நிறுவனங்கள்கூட இந்தக் கருவியைப் பயன்படுத்துகின்றன.