இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, தற்போது பாகிஸ்தான் அரசியலுக்குள்ளும் அடியெடுத்து வைத்திருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது. அவற்றுள் ஒன்றான கரப்பான் பூச்சி அவாமி கட்சி, பாகிஸ்தானின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஒரு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது.
"வேலையில்லாமல், எந்தத் தொழிலும் செய்யத் தகுதியற்ற சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப்போல ஒட்டுண்ணிகளைப்போல சமூக வலைத்தளங்களில் எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்" என ஒரு வழக்கின் விசாரணையின்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சர்ச்சையான நிலையில், "நான் போலிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டேன், ஒட்டுமொத்த இளைஞர்களை அல்ல" என நீதிபதி சூர்யகாந்த் பதில் அளித்திருந்தார். ஆனாலும், இவ்விவாதம் சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அபிஜீத் திப்கே என்பவர் இன்ஸ்டா பக்கத்தில் 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற பக்கத்தைத் தொடங்கினார்.
அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். ஒருகட்டத்தில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதையடுத்து, அப்பக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும், மீண்டும் அதேபெயரில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டு, அது மேலும் வைரலாகி வருகிறது.
இந்தச் சூழலில்தான் இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு இணையத்தில் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது பாகிஸ்தானிலும் அதுபோன்ற பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான கரப்பான் பூச்சி அவாமி கட்சி, பாகிஸ்தானின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஒரு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது.
மேலும், அந்தக் குழுக்களில் கரப்பான் பூச்சி அவாமி கட்சி மற்றும் கரப்பான் பூச்சி அவாமி லீக் ஆகியவையும் அடங்கும். “இப்பக்கங்கள், இந்தியாவைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது” என வெளிப்படையாகவே அவைகள் ஒப்புக்கொண்டுள்ள போதும், “எல்லோருக்கும் குறிக்கோள் ஒன்றே” எனத் தெரிவித்துள்ளது. மேலும் அது, "எந்தவொரு தனி நபருடனோ அல்லது எந்தவொரு தனி அணியுடனோ தொடர்புடையவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு ஜென்-இஸட் தலைமுறையினரின் உண்மையான குரலாக மாறுவதே தங்கள் நோக்கம்” என்றும் அது தெரிவித்துள்ளது. இதனால், கரப்பான் பூச்சியின் தாக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.