இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலுக்கு எதிரானப் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் x
உலகம்

இஸ்ரேலை கண்டித்து போராட்டம்| ”அநீதியை எப்படி கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்..” - முதல்வர் ஸ்டாலின்

காசா மீதான தாக்குதலுக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

PT WEB

காசாவில் நடக்கும் இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவர, இஸ்ரேல் மற்றும் இதில் தொடர்புடைய நாடுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை நிறுத்தக் கோரி பல நாடுகளிடம் இருந்து அழுத்தம் வந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலுக்கு எதிரானப் போராட்டம்

காசா மீதான தாக்குதலுக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிடர் கழகம் தலைவர் வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். மேடையில் இருந்த முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள், காசாவில் இனப்படுகொலையை நிறுத்துக என்ற வாசகத்துடன் கூடிய பதாகையையும், பாலஸ்தீன கொடிகளையும் ஏந்தியபடி அமர்ந்திருந்தனர்.

தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் நமது எல்லாரின் மனதையும் உலுக்குகிறது. கடந்த ஒரு ஆண்டாக காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் இதுவரை‌ 11 ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர். உணவுக்காக காத்திருந்த பலபேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அநீதியை நாம் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்க முடியும். போர் முடிவுக்கு வர வேண்டும். இதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம்.

இஸ்ரேல்-காசா போர், ஸ்டாலின்

ஒன்றிய பா.ஜ.க அரசு இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மனிதநேயம் உள்ள நாம் இதை வேறு நாடு பிரச்சினையாக பார்க்க கூடாது. மனித உயிர்கள் விலை மதிப்பற்றது‌. உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் அவர்களுக்கு வழங்க வேண்டும்‌‌. வருகிற 14-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்று பேசினார்.