பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில், அந்நாட்டில் தொடர் கனமழை காரணமாகவும் மேகவெடிப்பு காரணமாகவும், கைபர் பக்துன்க்வா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மட்டும் 307 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பேரும், கில்ஜித்-பல்டிஸ்தானில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் புனேர் மாவட்டத்தில் மட்டும், 10 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. அங்கு மட்டும் இதுவரை184 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தில் வீடுகள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில்,மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
சுமார் 2,000 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும், சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், இன்று முதல் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மழை தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்த மழை, வெள்ளம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அவசர கூட்டத்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.