பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள சூழலில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது அதனால் சர்வதேச அளவில் எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
அதேவேளையில் அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக பல்லாயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் ஈரான் மீது அமெரிக்கா ஒரு தரைவழித் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், ஈரானின் பிரஸ் டிவி தளத்தில் வெளியிட்ட ஒரு புதிய காணொளியில், இஸ்லாமியக் குடியரசின் இராணுவம் தனது கமாண்டோக்களின் காட்சிகளைக் காட்டி, "அமெரிக்க வீரர்களை எதிர்கொண்டு தோற்கடிக்கத் தயாராக உள்ளது" என்று கூறியுள்ளது. 59 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், "நெருங்கி வாருங்கள், உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்ற செய்தியுடன், உணர்ச்சிப்பூர்வமான இசையுடன் ஈரானிய சிறப்புப் படைகளின் காட்சிகள் வேகமாகத் தொகுக்கப்பட்டு காட்டப்படுகின்றன.
அந்தக் காணொளியின் காட்சிகளில், முழுமையான கவச உடை அணிந்த வீரர்கள் போர்ப் பயிற்சிகளில் ஈடுபடுவதும், கரடுமுரடான நிலப்பரப்பில் படைகள் முன்னேறுவதும் காட்டப்படுகின்றன. மற்றொரு காட்சியில், ஈரானிய இராணுவத்தின் ஒரு பெரிய ஏவுகணை ஏவு வாகனம் தனது ஆயுதங்களை பயன்படுத்துவதும் அதைத் தொடர்ந்து வெடிப்புகள் நிகழ்வதும் காட்டப்படுகிறது. கமாண்டோ பயிற்சிகள், ஏவுகணை ஏவுதல்கள் உள்ளிட்ட காட்சிகள் மூலம் அமெரிக்க தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக எச்சரிக்கிறது.
ஈரானில் பல வாரங்களுக்குத் தரைவழி நடவடிக்கைகளை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பென்டகன் திட்டங்களைத் தயாரித்து வருவதாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ள நிலையில், ஈரான் இந்த வீடியோவை வெளியிட்டு அமெரிக்காவுக்கு சவால் விட்டுள்ளது .
மோதலை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்று கூறும் அமெரிக்கா அதேவேளையில் மத்திய கிழக்கில் கூடுதல் அமெரிக்கப் படைகளையும் நிலைநிறுத்தியுள்ளது .