ஐரோப்பாவில் வரலாறு காணத அளவில் இந்தாண்டு வெப்பநிலை பதிவாகியிருக்கும் நிலையில், கடுமையான வறட்சி மற்றும் காட்டுத்தீ உள்ளிட்ட சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தான், இந்த காலநிலை மாற்றம் சுற்றுச்சூழலை மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன.
ஐரோப்பா உலகின் மற்ற கண்டங்களை விட வேகமாக வெப்பமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறிவரும் நிலையில், ரைன் மற்றும் டான்யூப் போன்ற முக்கிய நீர்வழிகளில் நீர்மட்டம் குறைந்ததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ஆறுகளின் நீர் அதிக வெப்பமடைந்ததாலும், நீர்மட்டம் குறைந்ததாலும் ஐரோப்பாவில் பல அணுமின் நிலையங்கள் உற்பத்தியை குறைக்க அல்லது நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் நெதர்லாந்தைச் சேர்ந்த முன்னணி நிதி நிறுவனமான ING Bank தெரிவித்திருக்கிறது.
மேலும், அதிக வெப்பம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனையும் பாதிப்பதோடு, உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான், காலநிலை பாதிப்புகளின் பொருளாதாரச் செலவு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை எட்டக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அலையன்ஸ் (Allianz) நிதி அமைப்பின் கணிப்பின்படி, ஜூன் மாதத்தின் முதல் இரு வார வெப்ப அலையால் மட்டும் ஐரோப்பாவின் ஜிடிபி 0.3% அளவுக்கு.. அதாவது, 180 பில்லியன் யூரோக்கள் சரிவைக் கண்டுள்ளது எனத் தெரிவித்திருக்கிறது. அதேபோல, காலநிலை மாற்றத்தின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பொருளாதாரம் 2030-க்குள் 5% முதல் 7% வரை சுருங்கும் எனவும் அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
அதே நேரத்தில், மின்சார அமைப்புகள், போக்குவரத்து வலையமைப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது உட்பட, அவசரகால நடவடிக்கைகள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்காக அரசாங்கங்கள் அதிக அளவில் செலவிட வேண்டும் எனவும் இது செலவு மிக்கதாக இருக்கும் என புரூகல் சிந்தனைக் குழுவின் (Bruegel think tank) மூத்த ஆய்வாளர் ஹீதர் கிராபே (Heather Grabbe) கூறியிருக்கிறார்.
இவ்வாறு, ஐரோப்பாவின் கடுமையான காலநிலை மாற்றம் என்பது வெறும் சுற்றுச்சூழல் சவாலாக மட்டுமல்லாமல், அது ஒரு பொருளாதாரச் சவாலும்கூட என்பதை மேலும் மேலும் நிரூபித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.