உலகம்

ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்

Veeramani

உலகின் பணக்கார நாடுகள் பெரும்பாலான கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால், ஏழை நாடுகளில் பெரும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என்று பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் குற்றம்சாட்டியிருக்கிறார்.

பணக்கார நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிடையே நிலவும் தடுப்பூசி ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்கள், தடுப்பூசி உருவாக்குபவர்கள் மற்றும் உலகமக்கள் முன்வரவேண்டும் என்று கிரெட்டா தன்பெர்க் கேட்டுக் கொண்டார்.

உலகளவில் பருவநிலைமாற்றம் தொடர்பான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்த கிரெட்டா தன்பெர்க், தனது அறக்கட்டளையிலிருந்து 1,00,000 யூரோக்கள் (120,000 டாலர்) உலக சுகாதார நிறுவன அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார், இந்த தொகை ஏழை நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்க உதவிசெய்யும் என தெரிவித்தார்.

உலகில் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளோருக்கு தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் நிலையில், பணக்கார நாடுகள் இப்போது இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி போட்டு வருவது முற்றிலும் தவறானது என்று கிரெட்டா தன்பெர்க் கூறினார்

அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 4 பேரில் ஒருவர் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500 ல் 1 பேர் மட்டுமே தடுப்பூசியை பெற்றுள்ளனர். எனவே சர்வதேச சமூகம், அரசாங்கங்கள் மற்றும் தடுப்பூசி உருவாக்குநர்கள், இந்த தடுப்பூசி ஏற்றத்தாழ்வு பிரச்னையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.