அமெரிக்காவின் சின்சினாட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த் துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
சின்சினாட்டி நகரில் இரவு 13.30 மணிக்கும், 2.15 மணிக்கும் அடுத்தடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் நகரின் வேறு சில இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதில் மொத்தம் 18 பேருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி இருப்பதாக சின்சினாட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் இடையே 60 முதல் 90 நிமிடம் இடைவெளி இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சின்சினாட்டி நகர் காவல்துறை உதவி தலைமை அதிகாரி பவுல் நெடிகாட் கூறுகையில் "வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு மிகவும் கொடூரமானது. இதில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரம் இப்போது வரை தெரியவில்லை" என்றார்.
மேலும் "17 பேர் மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலி எண்ணிக்கையும் உயர வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள்" என்றார் பவுல் நெடிகாட்