டாக்கா Reuters
உலகம்

இது டாக்கா அல்ல.. டெல்லி! பொய்களை பரப்பும் சீன Vlogers? இந்தியாவிற்கு எதிரான சதியா?

மற்றொரு சீன வ்லாகர், அங்குள்ள தேநீர்க் கடையில் விற்கப்படும் தேநீர், மாட்டுச் சிறுநீரில் தயாரிக்கப்படுவதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Premkumar S

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருப்பதாகக் கூறி, வங்கதேசத்தின் ஏழ்மையான குடியிருப்புப் பகுதிகளைச் சீன வ்லாகர்கள் (Vlogger) படம்பிடித்து வருவதாக வங்கதேச ஊடகம் ஒன்று நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, சீனா இந்தியா இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், உலகளவில் இந்தியா குறித்தான தவறான பிம்பத்தை உருவாக்க இந்த வீடியோக்கள் பரப்பப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து வங்கதேச ஊடகமான புரோதோம் அலோ (Prothom Alo) கடந்த நவம்பர் 6-ம் புலனாய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வங்கதேசத் தலைநகர் டாக்காவின் உத்தரா மற்றும் டெக்பாரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழ்மையான குடியிருப்பு பகுதிகளை 150க்கும் மேற்பட்ட சீன வ்லாகர்கள் (Vlogger) படம் பிடித்து வருகின்றனர். குறிப்பாக, நவம்பர் 1ஆம் தேதி சீனப் பெண் வ்லாகர் ஒருவர், உத்தரா பகுதியில் உள்ள கால்வாய் அருகே நின்று எடுத்த வீடியோவில், அது இந்தியாவின் தலைநகர் டெல்லி என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், அங்குள்ள வீடுகள் மிகவும் அசுத்தமாகவும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருப்பதாகக் கூறியுள்ளார். மற்றொரு சீன வ்லாகர், அங்குள்ள தேநீர்க் கடையில் விற்கப்படும் தேநீர், மாட்டுச் சிறுநீரில் தயாரிக்கப்படுவதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய வீடியோக்கள் சீனாவின் வீசாட் மற்றும் டூயின் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த சீன வ்லாகர்கள் அனுமதியின்றி வீடுகளுக்குள் நுழைந்து, சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட தனிப்பட்ட இடங்களையும் படம்பிடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இவர்கள் ஏழ்மையான தெருக்கள், குறுகலான சந்துக்கள் போன்ற இடங்களில் நின்று கொண்டு வீடியோ எடுப்பது குறித்து வங்கதேசத்தின் பல்வேறு ஊடகங்களும் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்னைகள், பொருளாதாரப் போட்டி உள்ளிட்ட விவகாரங்களால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவைக் குறித்து தவறான பிம்பத்தை சர்வதேச அளவில் உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வீடியோக்கள் பரப்பபடுகிறதா? அல்லது இந்திய ஏழ்மை குறித்து தெரிந்துகொள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால், அவர்களின் மூலம் பார்வைகளை அதிகரித்து அதிக வருவாய் ஈட்ட இவ்வாறு செய்கிறார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.