வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளையும் கடைப்பிடிக்கின்றனர். இது, இந்தியா தவிர உலகின் பல்வேறு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சிறுவயதிலிருந்து சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், வெயிலிலிருந்து தம் உடலைப் பாதுகாத்து வந்துள்ளார். அதன் விளைவாக அவருக்கு மெத்தையில் திரும்பிப் படுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டுவைச் சேர்ந்த 48 வயது பெண்மணிக்குத்தான் இந்த பிர்சனை ஏற்பட்டுள்ளது. அவர், பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார். அவர் உச்சி முதல் பாதம் வரை சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்களும் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் மெத்தையில் திரும்பிப் படுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைச் சோதித்த டாக்டர்கள் அவருக்கு வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அவருக்கு 'கடுமையான ஆஸ்டியோபோரோசிஸ்' இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகப்படியான சூரிய ஒளியைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து சீன மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சூரிய ஒளியை நீண்டகாலமாகத் தவிர்ப்பது எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உடல் நிறத்திற்காக ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள வேண்டாம் என சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சீனாவின் எலும்பியல் முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜியாங் சியாவோபிங், "சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பிற்காக தலைமுதல் கால்வரை முழுமையாக மூடப்பட்டிருப்பவர்களை இப்போது அடிக்கடி பார்க்கிறோம். இது உண்மையில் ஆரோக்கியமற்றது. 30 வயதிலிருந்து, வருடத்திற்கு 0.5 முதல் 1 சதவீதம் வரை எலும்பு வளர்ச்சி குறையத் தொடங்குகிறது. குறைந்த கால்சியம் உட்கொள்ளல், சூரிய ஒளியின்மை மற்றும் வைட்டமின் டி குறைபாடு அனைத்தும் கால்சியம் உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. உட்கார்ந்த வாழ்க்கை முறை, புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான குடிப்பழக்கம் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.