கொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தையாக இருந்தது என சீன வைராலஜிஸ்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீன வைராலஜிஸ்ட் லி மெங் யான், கொரோனா நோய்த்தொற்றை தயாரித்தது சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில்தான் என்ற தகவலை மீண்டும் உறுதிபட கூறியுள்ளார்.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற வைராலஜிஸ்ட் லி மெங் யான், கொரோனா வைரஸ் உண்மையில் வூஹான் ஆய்வகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார். தற்போது ஒரு நேர்காணலில், சீன அரசாங்கம் கோவிட்-19 பரவுவதைப் பற்றி அறிந்திருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு அதை மூடி மறைப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தொற்றின் தொடக்கப் புள்ளியாக வூஹான் மார்க்கெட் கருதப்படுவது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சூழ்ச்சி என்று யான் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சீன அரசாங்கம் சமூக ஊடகங்கள் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும், சீனாவிலுள்ள தனது குடும்பத்தை அச்சுறுத்துவதற்காக அவர் மீது சைபர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, கொரோனா வைரஸ், வூஹான் நகரத்திலுள்ள ஒரு வைராலஜி ஆய்வகத்திலிருந்து வந்தது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் வூஹானின் சந்தையிலிருந்து தொற்று பரவவில்லை என்றும் லி மெங் யான் கூறியிருந்தார். இதையடுத்து அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
சீன தேசிய சுகாதார ஆணையம், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழகம் ஆகியவை லி மெங் யானின் கூற்றுகளை தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.