உலகம்

ஸி ஜின்பிங்கின் வடகொரியா பயணம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?

ஸி ஜின்பிங்கின் வடகொரியா பயணம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?

webteam

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்த புகைப்படங்கள் அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதித்தது. இதையடுத்து வட கொரியாவுக்கு பொருளாதார தடைகளை உலக நாடுகள் விதித்தன. குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவும், வடகொரியாவும் திடீரென தோளோடு, தோள் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அதிரடியான அதிசய சந்திப்பை நடத்தியது. பின்னர் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறைவடைந்தது. இதனால் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சீன அதிபர் ஸி ஜின்பிங் வடகொரியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 14 ஆண்டுகளுக்கு பின்னர் சீன அதிபர் ஒருவர் வடகொரியாவுக்கு செல்கின்றார். இந்த பயணத்தின் போது, ஸி ஜின்பிங் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது குறித்து விவாதித்துள்ளதாக தெரிகிறது. 

முன்னதாக, கிம் சீனாவுக்கு 3 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்த புகைப்படங்களை அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 

ஜி20 நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் ஜப்பானின் ஒசாகவில் நடைபெற்றவுள்ளது. அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு ஒருவாரத்திற்கு முன்பு வடகொரியாவில் ஜின்பிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.