உலகம்

ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியை பார்க்க சீன அதிகாரிகளுக்கு தடை?

ச. முத்துகிருஷ்ணன்

மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த உலகெங்கிலும் இருந்து தலைவர்கள் குவிய உள்ள நிலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக இங்கிலாந்து காவல் துறையினருடன் அந்நாட்டு எம்ஐ 5 பிரிவு உளவுத்துறையினரும் இணைந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியை பார்ப்பதற்கு சீன அரசு அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்ஜியாங்கில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விமர்சித்ததற்காக 5 பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனா தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாக ராணியின் சவப்பெட்டியை காண சீன அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த தடை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர் மறுத்துவிட்டார். பாதுகாப்பு விஷயங்களில் கருத்து தெரிவிக்கவில்லை என்று காமன்ஸ் சபை தெரிவித்துள்ளது.