உலகம்

சீனா: அரிய நோயால் மரணத்தின் பிடியில் குழந்தை.. வீட்டிலேயே மருந்து தயாரிக்கும் பாசத் தந்தை

நிவேதா ஜெகராஜா

தன் குழந்தையை அரிய மரபணு குறைபாட்டிலிருந்து மீட்பதற்காக, வீட்டிலேயே குழந்தையின் நோய்க்கான மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சீன தந்தையொருவர்.

2 வயதேயாகும் சீன குழந்தை ஹாயாங்க்கிற்கு, மென்கெஸ் சிண்ட்ரோம் என்ற மிக அரிதான ஒரு மரபணு பாதிப்பு சமீபத்தில் உறுதி செய்யப்பட்டிருந்திருக்கிறது. இந்த பாதிப்புள்ள குழந்தைகள், 3 வயதுக்குமேல் வாழ்வது சிரமமென மருத்துவம் சொல்கிறது. இதற்கு உரிய மருந்து, தற்போது சீனாவில் கிடைக்காத நிலையும் உள்ளது. இதனால் குழந்தையின் தந்தை சூ வெய், வேறு நாட்டுக்கு தன் குழந்தையை அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்.

ஆனால் சீனாவில் கொரோனா தடுப்புக்காக எல்லைகள் மூடப்பட்டிருப்பதால், அவரால் பயணப்பட முடியாமல் போயுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர், என்ன செய்வதென தெரியாமல் விழிபிதிங்க நின்ற நிலையில், இறுதி ஆயுதமாக வீட்டிலேயே அந்த மருந்தை தயாரிக்கும் முயற்சியை தொடங்கியிருந்திருக்கிறார். இதற்காக வீட்டிலேயே ஆய்வகம் ஒன்றை உருவாக்கியிருந்திருக்கிறார் அவர்.

30 வயதாகும் சூ வெய், வீட்டிலேயே மருந்து உருவாக்கம் குறித்து சீன ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் செய்வது சரியா தவறா, இதை செய்யலாமா வேண்டாமா என்றெல்லாம் யோசிக்க எனக்கு நேரமில்லை. இப்போது இதை நான் செய்தே ஆக வேண்டும். அவ்வளவுதான். என் குழந்தை இன்னும் பேசும் அளவுக்கோ, நடக்கும் அளவுக்கோகூட வளரவில்லை. இருந்தாலும், அவனுடைய குரலை என்னால் கேட்க முடியும்... அவனுடைய உணர்வுகளை என்னால் உணர முடியும்” என்று கூறியிருந்திருக்கிறார்.

சூ வெய், பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த சாதாரண தந்தையென்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் சிறு வணிகமொன்றை மேற்கொள்ளும் இவர், மகனுக்காக இந்த முயற்சியில் ஈடுப்பட்டிருந்திருக்கிறார். சூ வெய்யின் இந்த முயற்சிக்கு அவருடைய நண்பர்கள், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. ‘நடைமுறையில் இந்த மருந்து குழந்தையை காப்பாற்ற உதவாது’ என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.