உலகம்

மலை மலையாக குவிந்த பணக்கட்டுகள்! கோடிகளில் போனஸை கொட்டி கொடுத்த நிறுவனம்; எங்கு தெரியுமா?

JananiGovindhan

டெக் உலகின் ஜாம்பவானாக இருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ட்விட்டர் மற்றும் அமேசான், ஐபிஎம் போன்ற நிறுவனங்களே தங்களது ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து, சம்பளத்தையும் குறைத்து வரும் இதே வேளையில் சீனாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு காண்போரை அசர வைத்திருக்கிறது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற நிறுவனம்தான் தனது ஊழியர்களை சிறப்பாக கவனித்திருக்கிறது. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, வியட்னாம், தாய்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மலேசியா, மால்டா, சவுதி அரேபியா, பெரு, சிங்கப்பூர், எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு தனது உற்பத்திகளை விற்பனை செய்து வருகிறது.

கொரோனா மற்றும் உலக மந்தநிலை காரணமாக சீனாவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் வேளையில் ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் அதாவது 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்திருக்கிறது.

இதனால் மகிழ்ச்சியில் திளைத்துப் போன்ற நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க எண்ணி அதற்கான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் 60 மில்லியன் யுவான் (72.48 கோடி ரூபாய்) பணத்தை மலை போல குவித்து வைத்து ஊழியர்களின் புருவத்தை உயரச் செய்திருக்கிறது.

அதில் நிறுவனத்தின் உயர்வுக்கு சீரிய பணியை ஆற்றிய முக்கிய மூன்று சேல்ஸ் மேலாளர்களுக்கு தலா 6 கோடி ரூபாயும், எஞ்சியோருக்கு ஒரு மில்லியன் யுவானும் கொடுத்து மகிழ்வித்திருக்கிறது ஹெனன் மைன் நிறுவனம். இதுபோக, நிகழ்ச்சியில் குவித்திருந்த பணத்தை எண்ணுவோருக்கும் சிறப்பு வழங்கிய அந்நிறுவனம், போனஸோடு நிறுத்தாமல் அனைத்து ஊழியர்களுக்கும் 30 சதவிகிதம் சம்பள உயர்வும் வழங்கியிருக்கிறது. இது நிகழ்வு குறித்த வீடியோக்களும் ஃபோட்டோக்களும் சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.