china long march 12 A rocket pt web
உலகம்

சீனா : மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்.. தோல்வியில் முடிந்த சோதனை..

சீனாவின் 'மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்' சோதனை தோல்வியில் முடிந்திருக்கிறது. ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியிட முயன்று சறுக்கல்!

PT WEB

விண்வெளித்துறையில் அமெரிக்காவின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்குச் சவாலாகத் திகழ விரும்பும் சீனாவின் முயற்சிக்கு மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சீனாவின் 'லாங் மார்ச் 12A' ராக்கெட்டின் முதல் கட்டச்சோதனை தோல்வியில் முடிந்தது.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23, 2025) நடைபெற்ற இந்த ராக்கெட் சோதனையில், அதன் இரண்டாம் கட்டம் திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நுழைந்தது. ஆனால், பூமியில் தரையிறங்கி மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டிய 'பூஸ்டர்' எனப்படும் முதல் கட்டத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியவில்லை. இந்த ராக்கெட்டை சீன அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'CASC' தயாரித்துள்ளது. சீனா மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டைத் தரையிறக்க முயன்று வரும் நிலையில் இது இரண்டாவது தோல்வியாகும்.

இதற்கு முன்பு, 'லேண்ட்ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் 'ஜுகுவே-3' ராக்கெட் சோதனையும் இதேபோல தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ராக்கெட்டை ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியாமல், அதன் முக்கியப் பகுதிகளை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளிப் பயணங்களுக்கான செலவை பெருமளவு குறைக்க முடியும்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது 'பால்கன் 9' ராக்கெட் மூலம் இந்தத் தொழில்நுட்பத்தில் பல ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளது. அவர்களை வீழ்த்த சீனா தீவிரமாக முயன்று வருகிறது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இத்தகைய ராக்கெட்டுகள் மிகவும் அவசியம். இந்தத் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், விண்வெளிப் போட்டியில் அமெரிக்காவிற்கு இணையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சீனா தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.