china reuters
உலகம்

அசுர பலம் பெறும் சீனா! அமெரிக்காவை மிரள வைக்கும் கடற்படை! இந்தியப் பெருங்கடலையும் குறிவைக்கிறதா?

தரையிலும் வானிலும் தனது ராணுவ பலத்தைத் தொடர்ந்து அதிகரித்து வரும் சீனா, கடலிலும் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தத் தயாராகி வருகிறது. அப்படி என்னதான் செய்கிறது சீனா? அதன் கடற்படை பலம் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது? விரிவாகப் பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

கடந்த சில ஆண்டுகளாகவே சீனா தனது ராணுவக் கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு இணையான ராணுவ வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில், தரைப்படை மற்றும் விமானப்படை மட்டுமின்றி, கடற்படையையும் நவீனமயமாக்கி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தற்போது சீனக் கடற்படையில் உள்ள போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டியுள்ளதாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படையுடன் ஒப்பிடும்போது, கப்பல்களின் எண்ணிக்கையில் சீனா சுமார் 35 சதவீதம் முன்னிலையில் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

china

ஆனால், சீனாவின் கடற்படை பலம் வெறும் கப்பல்களின் எண்ணிக்கையோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆசியாவின் முக்கியமான கடல் வழித்தடங்களில் தனது போர்க்கப்பல்களைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. குறிப்பாக, தென்சீனக் கடல், தைவான் ஜலசந்தி, ஜப்பானின் தெற்குப் பகுதிகள் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் பகுதிகளில் சீனக் கடற்படையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆசியாவின் முக்கியமான கடல் வழித்தடங்களில் நாள்தோறும் சுமார் 100 சீனக் கடற்படைக் கப்பல்கள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா இவ்வளவு வேகமாகத் தனது கடற்படையை விரிவுபடுத்துவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, அந்நாட்டின் பிரம்மாண்டமான கப்பல் கட்டுமானத் தொழில்தான். உலகின் மிகப்பெரிய வணிகக் கப்பல் கட்டுமானத் துறையைக் கொண்ட நாடாக சீனா விளங்கி வருகிறது. இந்தக் கட்டமைப்பின் உதவியுடன் அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் மிக வேகமாக உருவாக்கி வருகிறது. குறிப்பாக, 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 71 முக்கிய போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைச் சீனா தனது கடற்படையில் இணைத்துள்ளதாக அமெரிக்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் கடந்த ஆண்டு மட்டும் 19 கப்பல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், சீனாவின் கடற்படை விரிவாக்கம் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கடல்சார் ஆதிக்கத்துக்குச் சீனாவின் வளர்ந்து வரும் கடற்படை போட்டியாக அமைந்துள்ளது.

china

இதில், இந்தியாவுக்கான முக்கியத்துவமும் அதிகம். ஏனெனில், சீனா தனது கடற்படையை விரிவுபடுத்துவது தென்சீனக் கடல் பகுதியில் மட்டும் அதன் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காக அல்ல. இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தனது கடல்சார் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலில் சீனாவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆய்வுக் கப்பல்களின் நடமாட்டத்தை இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. குறிப்பாக, அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் சர்வதேசக் கடல் வணிகப் பாதைகளில் சீனாவின் இருப்பு அதிகரித்தால், அது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்குக் கூடுதல் சவாலாக அமையக்கூடும். எனவே, சீனாவின் இந்தக் கடற்படை விரிவாக்கம் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் முக்கியமான பாதுகாப்பு விவகாரமாக மாறியுள்ளது.