இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இது, பலவிதமான தொழில் நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. மேலும், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இதன்மூலம் பொறியாளர்களும் தயாரித்து வருகின்றனர். இது, சுகாதாரம், நிதி, போக்குவரத்து, உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது சீனாவும் போட்டியில் களத்தில் குதித்துள்ளது. தவிர, அது அறிமுகப்படுத்தியிருக்கும் புது மாடலால் அமெரிக்க மற்றும் உலக வர்த்தகப் பங்குச் சந்தைகளே ஆட்டம் கண்டுள்ளன. சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுவருவதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தை, இன்று காலை வணிகம் தொடங்கியதும், மிக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா பங்குகள் சரிவைக் கண்ட நிலையில், பங்குச் சந்தையும் சரிவுடன் வணிகமானது. என்விடியாவின் பங்குகள் 17 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. இது, 560 பில்லியன் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததால் நாஸ்டாக் 5 சதவீத சரிவை சந்தித்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஏஐ துறையில் இருக்கும் மைக்ரோசாஃப்ட், மெட்டா பிளாட்பார்ம்ஸ், ஆல்பபெட் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் 2.2 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை சரிவைக் கண்டன. மேலும், அமெரிக்க பங்குச் சந்தையில் இன்று சந்தித்த மிகப்பெரிய சரிவால், முதலீட்டாளர்கள் 82,000 கோடி ரூபாய் வரை நட்டம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது. என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் உடைய சொத்துமதிப்பில் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் [20.1 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது.ஜென்சன் ஹுவாங் Oracle Corp இணை நிறுவனர் லேரி எலிசன் உடைய சொத்தில் 12 சதவீதம் [22.6 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ”டீப் சீக் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அமெரிக்க தொழில்துறைக்கு எச்சரிக்கை மணி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டீப்சீக் (Deepseek) ஏஐ மாடல், அமெரிக்காவின் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் நவீன வசதிகளை வழங்கிவரும் நிலையில், டீப்சீக் ஆர்1 அனைத்து நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இதனால் சாட்ஜிபிடியைத் தாண்டி, ஆப்பிளின் US ஸ்டோரிலும் உலகளவிலும் டீப்சீக் செயலி அதிகமான டவுன்லோட்களை கடந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்து தயாரித்துள்ள நிலையில், டீப்சீக் நிறுவனம் 6 மில்லியன் டாலர்களில் அதை உருவாகிவிட்டது. மேலும், விலை மலிவான ஏஐ சேவையை வழங்குவதும், புதிய போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான உயரிய சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துவரும் சூழலில்தான் டீப்சீக்சின் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.