model image freepik
உலகம்

சீனா: வளர்ப்புப் பூனையால் வந்த வினை.. வேலையை இழந்த பெண்!

வளர்ப்புப் பூனை ஒன்றால், சீனப் பெண்மணி ஒருவர் தனது வேலையை இழந்துள்ளார்.

Prakash J

சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான பெண்மணி ஒருவர், ஒன்பது பூனைகளை வளர்த்து வருகிறார். மேலும் இவர் ஒரு நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவைகளைக் கவனிக்கும் பொருட்டு, கடந்த ஜனவரி 5ஆம் தேதி, தனது வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறி தன்னுடைய லேப்டாப்பில் மின்னஞ்சல் மூலம் தட்டச்சு செய்துள்ளார்.

model image

ஆனால், வேலையை இழந்துவிட்டால் தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளை எப்படி கவனித்துக்கொள்வது என்ற யோசனையில் அதனை அனுப்ப வேண்டாம் என முடிவு செய்துள்ளார். அப்போது, திடீரென அவரது வளர்ப்புப் பூனைகளில் ஒன்று அந்த லேப்டாப்பின் மீது ஏறிக் குதித்துள்ளது. அதில், அந்தப் பூனையின் கால் பட்டதில் அந்த லேப்டாப்பின் பட்டன்கள் அழுத்தப்பட்டு அந்த கடிதம் அப்பெண்ணின் நிறுவனத் தலைவருக்கு சென்றுள்ளது.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரது நிறுவனத்தை அழைத்து நடந்தவற்றை கூறியுள்ளார். ஆனால், அவரது விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாத நிறுவனம், அவரை வேலையைவிட்டு நீக்கியுள்ளது. இதனால், வேலையை இழந்த அந்தப் பெண்ணுக்கு வருட முடிவில் கிடைக்கும் ஊதிய வெகுமதியும் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்படிச் செல்லப் பிராணிகள் அதன் உரிமையாளருக்குச் சிக்கலை ஏற்படுத்துவது முதன்முறையல்ல. தாய்லாந்தின் உடோன் தானி மாகாணத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நாய் ஒன்று, அதன் உரிமையாளரின் வீட்டுக்குள் வெடிக்கும் பொருளை வெளியில் இருந்து எடுத்து வந்து போட்டது. சுதாரித்த அவர், போலீஸுக்கு தகவல் கூறி பிரச்னையைச் சுலபமாக முடித்தார்.