சீனா திருமணம் எக்ஸ் தளம்
உலகம்

சீன இளைஞர்களின் திருமணத்திற்காக பக்கத்து நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் பெண்கள்; பின்னணி என்ன?

சீனாவில் உள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்காக பெண்கள் கிடைக்காத நிலையில் வங்கதேசம், மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து அவர்கள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

PT WEB

சீனாவில் உள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்காக பெண்கள் கிடைக்காத நிலையில் வங்கதேசம், மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து அவர்கள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கருவில் பெண் குழந்தை இருப்பது தெரியவந்தால் அவற்றை கருக்கலைப்பு செய்யும் போக்கு சீனாவில் பரவலாக இருந்து வருகிறது. இதனால் அங்கு பாலின சமநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

china

சீனாவில் 100 பெண் குழந்தைகள் பிறக்கிறது என்றால் 121 ஆண் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏராளமான இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் கிடைக்காமல் சுமார் 3 கோடி இளைஞர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலைமையை சமாளிக்க பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து ஏழைப் பெண்கள் சீனாவுக்குள் கடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டிலிருந்து ஏழைப்பெண்களை அழைத்து வருவதற்கு என்றே பெரிய தொழிற்துறையே சீனாவில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பெண்கள் வயது தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் 5 ஆயிரம் டாலர்கள் முதல் 20 ஆயிரம் டாலர்கள் வரை விற்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த போக்கு குறித்து சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. சீன அரசுக்கு இதுகுறித்து தெரிந்திருந்தாலும் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. எனினும் தற்போது இது குறித்து மக்களுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள சீன தூதரம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. வெளிநாட்டு பெண்கள் திருமணத்திற்காக ஏற்பாடு செய்வதாக கூறி ஸ்கேம்கள் நடப்பதாகவும் அதுபோல் யாரேனும் அணுகினால் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.