உலகம்

சீனா: குளிர்கால ஒலிம்பிக் தொடரை முன்னிட்டு ஓட்டுநர் இல்லாத புல்லட் ரயில் அறிமுகம் 

EllusamyKarthik

எதிர்வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதனை முன்னிட்டு ஓட்டுநர் இல்லாத புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புல்லட் ரயில் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலில் மொத்தம் 8 கேரியேஜ்கள் உள்ளன. அதன் மூலம் சுமார் 564 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் நகரிலிருந்து, 108 மைல் தூர இடைவெளியில் அமைந்துள்ள ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைக்கும் மற்ற நகரங்களை இந்த ரயில் இணைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 நிமிடங்களில் இந்த பயணம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் சென்றால் இந்த தூரத்தை கடக்க மூன்று மணி நேரமாகுமாம்.  

இந்த புல்லட் ரயில் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சீன ஊடகம். இதில் உள்ள 5ஜி தொலைத்தொடர்பு வசதி பெற்ற ஸ்டூடியோ மூலம் ஊடகவியலாளர்கள் ரயிலில் பயணித்துக் கொண்டே செய்தியை ஒளிபரப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தடகள வீரர்கள் தங்களது சாதனங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள லாக்கர் ரூம்களும் இதில் உள்ளனவாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயோ பபூளுக்குள் வீரர்கள் உட்பட ஒலிம்பிக் நிகழ்வை சார்ந்த அனைவரும் இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.