உலகம்

சீனாவில் வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் அச்சம்

சீனாவில் வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் அச்சம்

webteam

சீனாவில் கொரோனா பரவுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கண்டங்கள் கடந்து 180 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்‌டு வருகின்றன. இந்நிலையில், கொரரோனா தாக்கம் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அங்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 தினங்களாக புதிதாக யாரும்‌ கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ளவர்களை முழுமையாக குணப்படுத்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், மற்ற நாடுகளில் இருந்து சீனாவிற்கு வைரஸ் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. ‌அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கிருக்கும் சீனர்கள் தாயகம் திரும்புகின்றனர்.

அவ்வாறு சீனா சென்றவர்களில் இதுவரை 228 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மெல்ல மீண்டு எழும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்று‌ உள்ளவர்களை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் என அனைத்தையும் மிக விரைவாக மேற்கொள்ள சீன அரசு அதிதீவிரம் காட்டு வருகிறது. BOOMARANG போல் தொடங்கிய இ‌டத்திற்கே மீண்டும் வந்துள்ள கொரோனா வைரஸை முழுமையாக அழிப்பதே உல‌கம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரே வழியாக உள்ளது