China theft Nvidia chip Reuters
உலகம்

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா : நூதன முறையில் நடைபெற்ற திருட்டு !

சீனா அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கக் கூடாது என அமெரிக்கா விதித்த தடையை மீறி நூதன முறையில் நடைபெற்ற திருட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை உருவாக்கவும் செயல்படுத்தவும் அதிவேகமான மற்றும் திறன்மிக்க சிப்கள் (Processor) தேவைப்படும் நிலையில், உலகளவில் இந்த வகை சிப் தயாரிப்பில் என்விடியா (Nvidia) நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.

அதிலும் என்விடியா நிறுவனத்தின் H200 வகை சிப் (Nvidia H200 Tensor Core GPU) செயற்கை நுண்ணறிவு மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க உலகில் மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. சிக்கலான செயற்கை நுண்ணறிவு மாடல்களை மிகக் குறைந்த நேரத்தில் பயிற்றுவிக்கவும், ஒரே நேரத்தில் பல மில்லியன் பயனர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும் அதிக ஆற்றலும் வேகமும் தேவைப்படும் நிலையில், அதனை ஈடு செய்யும் உலகின் ஒரே சிப்பாக என்விடியா H200 சிப் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த வகை சிப்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

China theft Nvidia chip

இதனால் இதற்கு உலகம் முழுவதும் தேவை அதிகரித்துள்ள நிலையில், சீனா முன்னர் இந்த வகை சிப்களை அதிக அளவில் கொள்முதல் செய்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அமெரிக்க அரசு சீனாவுக்கு அதிநவீன சிப்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததோடு சீனாவின் பல்வேறு நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் இந்த தடையை மீறி என்விடியா நிறுவனத்தின் அதிநவீன H200 சிப்களை சீனா வாங்கியுள்ள தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் கருப்பு பட்டியலில் உள்ள சீனாவின் நார்த்வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் (Northwestern Polytechnical University) இரண்டு அதிநவீன என்விடியா நிறுவனத்தின் H200 சிப்களை வாங்கியுள்ளது.

China theft Nvidia chip

இந்த சிப்களை நேரடியாக இறக்குமதி செய்யமுடியாது என்பதால் அமெரிக்காவின் தடை பட்டியலில் இல்லாத ஷான்சி போசுவான் நெட்வொர்க் டெக்னாலஜி (Shaanxi Bosuan Network Technology) என்ற சீன நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே வழிமுறையை பயன்படுத்தி வேறு சீன நிறுவனங்களும் என்விடியா H200 சிப்களை வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் இதற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.