அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், தற்போது உலக நாடுகளுக்கு வரிவிதிப்பின் மூலம் அன்றாடம் தலைப்புச் செய்திகள் இடம்பிடித்து வருகிறார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்துள்ளார். எனினும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.
பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியையும் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கிலிருந்து விமானங்களை வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த உத்தரவைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் 3 சதவீதம் சரிவை கண்டிருக்கின்றன. இது தவிர அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து விமானங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதையும் சீன நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
சீன அரசின் இந்த உத்தரவால் சீனாவில் செயல்படக்கூடிய விமானச் சேவை நிறுவனங்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றன. ஏனெனில் அமெரிக்காவிடமிருந்து விமான உபகரணங்கள் மற்றும் விமானங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சீனாவில் தங்களுடைய விமானங்களைப் பராமரிப்பதற்கு இந்த நிறுவனங்கள் அதிக தொகையை செலவிட வேண்டி இருக்கும். இந்த நிலையில், அதற்குத் தேவையான உதவிகளைச் செய்வது குறித்து சீன அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.