உலகம்

30 நாட்களில் 60000 மரணங்கள் - சீனாவை விடாமல் துரத்தும் கொரோனா

JustinDurai

சீனாவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மளமளவென பரவியதில் உலக நாடுகள் பலவற்றையும் அதிகமாக பாதித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. மறுபுறம் சீனாவில் கடைபிடிக்கப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கைகளால்  அந்நாட்டில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே உயிரிழப்புகள் பதிவாகின. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பால், தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தளர்த்தியது சீனா. இதையடுத்து அந்த நாட்டில் சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் (ஜனவரி) 12ஆம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,938  என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். இதில் பெரும்பாலானோர் 80 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 கோடியை கடந்துவிட்டதாகவும், நாட்டில் 64 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.