சீனாவின் வுகானில் 76 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய இந்த கொரோனா
தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 1,430,528 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,023 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் பல நாடுகள் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
இந்தியா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் ஊரடங்கு
அமலில் உள்ளது. அமெரிக்காவிலும் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனாவின் தொடக்க புள்ளியான சீனா மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி
வருகிறது. இந்நிலையில் சீனாவின் வுகானில் 76 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் முகக்கவசங்கள்
அணிந்துகொண்டு சாலைகளில் நடமாடத் தொடங்கியுள்ளனர். கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கை தளர்த்திக் கொண்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 10 ஆம் தேதி வுகான் மகாணத்தில் உள்ள இறால் விற்பனையாளர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா கண்டறியப்பட்டதாக
கூறப்பட்டது. அவர் தற்போது பூரணமாக குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.