சீனா, தைவான் எக்ஸ் தளம்
உலகம்

”மீண்டும் இணைப்பது காலத்தின் கட்டாயம்” - சீன அதிபரின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த தைவான்!

தைவானை மீண்டும் இணைப்பது தொடர்பாக சீன அதிபர் ஜின்பிங் கூறிய கருத்துக்கு, தைவான் பதிலடி கொடுத்துள்ளது.

Prakash J

தைவானை மீண்டும் இணைப்பது தொடர்பாக சீன அதிபர் ஜின்பிங் கூறிய கருத்துக்கு, தைவான் பதிலடி கொடுத்துள்ளது.

சீனக் கடல் பகுதி அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-இல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா சமீபத்தில் மேற்கொண்டு வரும் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்

இதுகுறித்து ஜப்பான் அரசு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தைவானை சீனாவுடன் மீண்டும் இணைப்பது காலத்தின் கட்டாயம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என தெரிவித்தார். அதற்கு தைவான் பதிலடி கொடுத்துள்ளது. ”சீனாவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார்” என தைவான் அதிபர் லாய் சிங் தே பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, சீனா 2027 இறுதிக்குள் தைவான் மீது போர் தொடுத்து வெல்லும் திறன் பெறும் என்று அமெரிக்க பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பென்டகன் அறிக்கையின்படி சீனா தைவானை படைபலத்தால் எப்படி கைப்பற்ற வேண்டும் என்பதை பல கோணத்தில் ஆய்வு செய்து தயாராகி வருவதாக telegraph தனது செய்தியில் தெரிவித்திருந்தது. சீனா ராணுவம் 2,000 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருந்து தாக்குதல் நடத்தும் திறனை உருவாக்கி வருவதாக பென்டகன் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

சீனா, தைவான்

இதற்கு பதில் அளித்த சீனா அரசு, இந்த அறிக்கைகளை அவதூறு பரப்பும் முயற்சி என கூறி மொத்த கருத்தையும் மறுத்திருந்தது. இதுமட்டுமல்லாமல் பென்டகன் சர்வதேச மக்களையும் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டியிருந்தது. இதற்கிடையே, அமெரிக்கா தைவானுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. அதன் பிறகுதான் சீனா, தைவானை சுற்றி பெரிய அளவிலான போர் பயிற்சியை நடத்துவதாக அறிவித்தது. ‘ஜஸ்டிஸ் மிஷன் 2025' என்ற பெயரில் தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்படும் என அது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.