சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றுவதற்காக சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட சீனா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - பூடான் எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியது முதல், இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. டோக்லாம் பகுதியில் குவித்துள்ள ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இந்தியா தரப்பில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை.
இந்நிலையில் அங்கிருந்து இந்திய துருப்புகளை அகற்ற சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் சீனா ஈடுபடும் என்று அந்நாட்டின் சர்வதேச உறவுகள் ஆராய்ச்சி நிபுணரான ஜூ ஜியாங் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சருக்கு சீனா முறைப்படி தகவல் தெரிவிக்கும் என்றும் இதனால் ஏற்படப் போகும் பாதிப்பை தவிர்க்க, இந்தியா படைகளைத் திரும்ப பெற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.