கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும், நோயால் உயிரிழந்தவர்களுக்கும் சீனாவில் நாடு தழுவிய மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சீனாவில் கிங்மிங் எனப்படும் மூதாதையர் தினம் ஏப்ரல் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் கோடிக்கணக்கான மக்கள் மூதாதையரின் கல்லறைகளுக்குச் சென்று அங்கு வழிபடுவதும் மலர்கள் மற்றும் ஊதுபத்திகளால் அஞ்சலி செலுத்துவதும் வழக்கம். இந்த ஆண்டு கல்லறை தினம் கொரோனாவால் உயிரிழந்தோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும், நோயால் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தலைவர்கள் இந்த தேசிய அஞ்சலியில் பங்கேற்றனர். பெய்ஜிங்கில் உள்ள ஸாங்னான்ஹய் Zhongnanhai தலைமை அலுவலகத்தில் சரியாக காலை பத்து மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அரைக்கம்பத்தில் பறந்த கொடியின் முன்பாக சீன அதிபர் உள்ளிட்ட அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். பின், அனைத்து வாகனங்கள், கப்பல்கள், ரயில்களின் ஹாரன்கள் ஒரேநேரத்தில் ஒலிக்கச்செய்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நோய் பரவலை தடுக்க ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கல்லறைகளுக்கு செல்லும் நிகழ்வுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து மக்கள், உயிரிழந்த உறவுகளின் புகைப்படத்தை நடைபாதை ஓரங்களில் வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்தும், காகிதங்களை எரித்தும், ஊதுபத்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.