உலகம்

சீனாவின் வசமான இலங்கையின் முக்கிய துறைமுகம்: இந்தியாவிற்கு ஆபத்தா?

சீனாவின் வசமான இலங்கையின் முக்கிய துறைமுகம்: இந்தியாவிற்கு ஆபத்தா?

webteam

இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகள் சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கையிலுள்ள முக்கியமான ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளை சீன அரசு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 
முன்னதாக இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை முழுவதுமாக சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடத்தில் ஈடுபட்டனர்.

அதனால் 70 சதவீத பங்குகளை மட்டுமே சீனாவிடம் குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை. ஹம்பன்தோட்டா துறைமுகத்திலிருந்து வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மட்டுமே சீனா மேற்கொள்ளும் என இலங்கை அரசு உறுதிமொழியளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணம், வெளிநாட்டுக் கடன்களை அடைக்க உதவும் என இலங்கை அரசு கூறுகிறது. தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் இந்த துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும். ஒரு தொழில்மண்டலத்தை உருவாக்குவதற்காக துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் அந்த நிறுவனத்திற்கு தரவுள்ளது இலங்கை அரசு.

இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை உற்று கவனித்துவருகின்றன. சீனா ஹம்பன்தோட்டா துறைமுகத்தை ராணுவ தளமாக பயன்படுத்தினால், இந்தியாவிற்கு அது மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும். இந்த ஒப்பந்தத்தால் தங்கள் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என இந்தியா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது.