உலகம்

2020ல் விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையம்: சீனா திட்டம்

2020ல் விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையம்: சீனா திட்டம்

webteam

6 விஞ்ஞானிகளை விண்ணுக்கு அனுப்பி வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி ஆய்வு மையத்தை சொந்தமாக அமைக்கும் கனவை நனவாக்க சீனா தீவிரமாக களமிறங்கியுள்ளது. 

உலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சீனா சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சோதனை ரீதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு நிலையத்தை சீனா நிறுவியிருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு அந்த ஆய்வுக்கூடம் செயலிழந்தது.

சுமார் 8 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி விழுந்தபோது வளிமண்டல உராய்வு காராணமாக எரிந்து சிதைந்து போனது. எனினும் மனம் தளராத சீனா, விண்வெளித் திட்டங்களில் முன்னோடியாக இருப்பது பெருமைக்குரியது என்றும் அதே நேரத்தில் எதிர்பாராத பல தோல்விகளைச் சந்தித்துதான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் விளக்கம் அளித்தது.

‌‌அதே சமயம் விண்வெளியில் ஆய்வு நிலையத்தை நிறுவ வேண்டும் என்ற தாகம் சீனாவுக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக வரும் 2020 ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. விண்ணில் சீனா அமைக்கவுள்ள புதிய ஆய்வு மையம் தற்போது தொடக்க நிலையில் இருக்கிறது. இதன் கட்டுமானப் பணி நடைப்பெற்றுவரும் நிலையில், அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ள விண்வெளி வீரர்களுக்கு இப்போது முதலே தீவிரமாக பயிற்சி கொடுத்து வருகிறது சீனா.

இந்த விண்வெளி ஆய்வுமையம் 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'T' வடிவத்தில் அமைக்கப்படவுள்ள இந்த விண்வெளி ஆய்வுமையத்தின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 6 வீரர்கள் சீனா அமைக்கும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பபடவுள்ளனர். அவர்கள் சுமார் 6 மாதங்கள் வரை அங்கு தங்கி ஆய்வை மேற்கொள்வார்கள்.

இந்த வீரர்களுக்கு தரையில் இருக்கும் விஞ்ஞானிகளின் இதயத் துடிப்பை அதிகரிக்கவும், நீருக்கடியில் நீண்ட நேரம் இருப்பது போன்ற பயிற்சிகளையும் சீனா வழங்கி வருகிறது. சீன விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு தேவையான உபகரணங்களுடன் 2 வீரர்கள் விண்கலம் மூலம் விரைவில் விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்காக இந்த வீரர்களுக்கு நீருக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு தொட்டியில் நீண்ட நேரம் இருப்பது எப்படி, நீருக்கு அடியில் நீந்துவது எப்படி உள்ளிட்ட பயிற்சிகள் தீவிரமாக வழங்கப்பட்டு வருகிறது. 

இந்தப் பயிற்சிகள் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீந்துவதற்கு உதவிகரமாக இருக்கும் என விண்வெளி மையத்தின் துணைத் தளபதி ரூயி தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராவதற்காகவும், சவாலான காரியங்களை எதிர்க்கொள்வதற்கும் இத்தகைய பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.