உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை அதிகம் கொண்ட நாடு சீனா. கடந்தாண்டு நிலவரப்படி சீனாவில் இயந்திர மனிதர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரம். 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 3 மடங்கு அதிகம்.
உலகின் இயந்திர மனிதன் உற்பத்தி நிறுவனங்களில் பாதிக்கு மேல் இந்நாட்டில்தான் உள்ளன. இங்குள்ள பல தொழிற்சாலைகளில் இயந்திர மனிதர்களே வேலை செய்வதால் விளக்கு வெளிச்சமே தேவைப்படவில்லை. இது போன்ற தொழிற்சாலைகள் இருட்டுத்தொழிற்சாலைகள் என்றே அழைக்கப்படுகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் சிறு மீன்பிடி கிராமமாக இருந்த ஷென்ஜென் இன்று உலகின் தொழில்நுட்பத் தலைநகரமாக திகழ்கிறது.
இயந்திர மனிதர்களை உற்பத்தி செய்து தள்ளுவதில் உலகின் நம்பர் ஒன் நகரம் இதுதான். உணவகங்களில் பரிமாறுவதற்கென்றே இங்கு தயாரிக்கப்பட்ட ரோபோ 60 நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.
மனிதர்கள் எடை சுமக்கும் திறனை அதிகரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட எக்சோஸ்கெலிடன் ரோபோ மிகப்பெரிய வரவேற்பை உலகெங்கும் பெற்றுள்ளது. தொழிற்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் என இடத்திற்கேற்ப செயல்படும் ரோபோக்களும் மிகவும் புகழ்பெற்றவை. தங்கள் தயாரிப்புத்திறனை விட 5 மடங்கு ஆர்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வருவதாகக் கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள்.
ஏப்ரல் 15ஆம் தேதி கேன்டன் நகரில் தொடங்கும் சர்வதேச கண்காட்சியில் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் எனப்படும் இன்றைய தேதிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இயந்திரமனிதர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளனர். இதற்காக உலகெங்கும் இருந்து தொழிற்துறையினர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஐ வருகை வேலைவாய்ப்புத்துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தொழிற்சாலைகளில் இருந்து வீடுகள் வரை இயந்திர மனிதர்களும் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் நாள் நெருங்கி வருவதாகவே பார்க்கப்படுகிறது