ட்ரம்ப் - ஜின்பிங் pt
உலகம்

தொடரும் வர்த்தகப் போர்| உலோகம், காந்தம் ஏற்றுமதியை நிறுத்திய சீனா.. அமெரிக்காவுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலோகங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

Prakash J

அமெரிக்கா - சீனா இடையே நிலவும் வர்த்தகப் போர்!

அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், தற்போது உலக நாடுகளுக்கு வரிவிதிப்பின் மூலம் அன்றாடம் தலைப்புச் செய்திகள் இடம்பிடித்து வருகிறார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்துள்ளார். எனினும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது.

சீனா, அமெரிக்கா

காந்தம், உலோகம் ஆகியவற்றின் ஏற்றுமதி நிறுத்திவைப்பு

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக்கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே, ’கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

90 சதவீதத்தை உற்பத்தி செய்யும் சீனா

சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதியைப் பாதிக்கும் இந்த நடவடிக்கை, முக்கியமான கனிமங்களை வெட்டியெடுப்பதிலும் பதப்படுத்துவதிலும் சீனா தனது ஆதிக்கத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவிற்கு மூன்று உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கு சீன முழுத் தடைகளை விதித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்கா - சீனா

சீன உலோகங்களைப் பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்!

மறுபுறம், அமெரிக்க அரசாங்கத்திடம் சில அரிய மண் தாதுக்கள் கையிருப்பில் உள்ளன. ஆனால் அதன் பாதுகாப்பு, ஒப்பந்தக்காரர்களுக்கு நிரந்தரமாக வழங்கப் போதுமானதாக இல்லை. இந்தச் சூழலில் லாக்ஹீட் மார்ட்டின், டெஸ்லா மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் சீன அரிய மண் தாதுக்களை தங்கள் விநியோகச் சங்கிலிகளில் பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்த நிறுவனங்களாகும்.

அமெரிக்காவிற்கு சீன உலோகங்கள் ஏன் முக்கியம்?

சீனாவால் ஏற்றுமதி தடை செய்யப்பட்ட கனமான அரிய பூமி உலோகங்கள் காந்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார கார்கள், ட்ரோன்கள், ரோபோக்கள், ஏவுகணைகள் மற்றும் விண்கலம் மற்றும் பெட்ரோலில் இயங்கும் கார்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல வகையான மின்சார மோட்டார்களுக்கு அவசியமானவை. இந்த உலோகங்கள் ஜெட் என்ஜின்கள், லேசர்கள், கார் ஹெட்லைட்கள் மற்றும் சில ஸ்பார்க் பிளக்குகள் மற்றும் மின்தேக்கிகள் ஆகியவற்றின் உற்பத்திக்கு தேவைப்படுகின்றன, இவை செயற்கை நுண்ணறிவு சேவையகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு சக்தி அளிக்கும் கணினி சில்லுகளின் மின் கூறுகளாகும்.