செல்போன் கூகுள்
உலகம்

செல்போன தொடாம இருக்க முடியுமா? இதுதான் டார்கெட்.. ஜெயிச்சா இவ்ளோ பரிசு.. சீனாவில் சுவாரஸ்ய போட்டி

நான் கூவுவதை கூவி வைக்கிறேன்.. நீ எழும்போது எழுந்துக்கொள்’ என்பது போல, செல்போன் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் வந்தபடி இருந்தாலும், மக்களிடையே இதன் பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

Jayashree A

செல்போன் இல்லை என்றால் உலகமே இல்லை என்ற நிலையாகிவிட்டது இன்றைய சூழ்நிலை.. யாரைப்பார்த்தாலும் செல்போனும் கையுமாகவே வலம் வருகின்றனர். நிச்சயம் செல்போன் பயன்பாடு பல விஷயங்களில் அத்தியாவசிய தேவைதான் என்றாலும், தேவையில்லா சமயங்களிலும் அதன் உபயோகத்தை அதிகரித்து பலரும் அதற்கு அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது.

பச்சிளங்குழந்தை முதல், பலகாலம் வாழ்ந்த பருவத்தினர் வரை தவிர்க்கவியலா ஒரு சூழ்நிலையை செல்போன் உருவாக்கிவிட்டது என்பதுதான் நிதர்சனம்.

செல்போன் சிலருக்கு கண், மூளை, உடல் மட்டுமல்லாமல் மனதளவில் பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து மருத்துவர்களும் மக்கள்நல ஆர்வலர்களும் பல்வேறு கருத்தரங்கு விழிப்புணர்வை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும், ’ நான் கூவுவதை கூவி வைக்கிறேன்... நீ எழும்போது எழுந்துக்கொள்’ என்பது போல, பல்வேறு விழிப்புணர்வுகள் வந்தபடி இருந்தாலும், மக்களிடையே இதன் பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இப்படி செல்போனும் கையுமாக இருப்பவர்களுக்கென்று சீனாவில் செயல்பட்டு வந்த ஒரு ஷாப்பிங் செண்டர் ஒன்று ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அதாவது பகல் நேரம் முழுக்க 8 மணிநேரம் செல்போனே பார்க்கக் கூடாது, மேலும் செல்போன் இல்லாமல் எந்த பதற்றமும் பதைபதைப்பையும் காட்டாமல் இருக்க வேண்டும். தூங்கவும் கூடாது... என்பதே இந்தப்போட்டியின் முக்கிய விதி. இது மிகவும் சுலபமாச்சே என்று போட்டிக்கு 100 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் பத்து பேர் தான் கலந்துக்கொண்டனர்.

இப்படி இந்த போட்டியில் கலந்துக்கொண்ட பத்துபேருக்கும், உணவு, குடிநீர் ஆகியவை அவர்கள் இருப்பிடதிற்கே வந்தது. அவர்கள் வேலை என்னவென்றால் சும்மா படுத்திருப்பது தான். இடையில் அவ்வப்போது இயற்கை உபாதைகளுக்காக செல்லலாம்.

இதில் கலந்துக்கொண்ட பத்து பேர்களில் சிலர் புத்தகத்தைப்படித்துக்கொண்டும் சிலர் கண்களை மூடிக்கொண்டும் இருந்தனர். இருப்பினும் செல்போன் இல்லாததால் பலபேர் இந்த போட்டியை விட்டு வெளியேறியுள்ளனர். கடைசியாக டோங் என்ற ஒரு பெண், விதிகள் படி 8 மணி நேரம் செல்போன் பார்க்காமல் இருந்ததால் பரிசுத்தொகையான ரூ. 1.16 லட்சத்தினை தட்டிச் சென்றார். செல்போனில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.