பெம் வாங் தோங்டாக் எக்ஸ் தளம்
உலகம்

"அருணாச்சல் சீனாவின் பகுதிதான்" - உறுதிபடத் தெரிவிக்கும் சீனா! பாஸ்போர்ட் விவகாரத்தில் நடந்தது என்ன?

’அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி’ எனத் தெரிவித்து இந்திய பிரஜையின் பாஸ்போர்ட்டை சீனா பறிமுதல் செய்தது எனப் பெண் ஒருவர் சாட்டிய புகாரில், இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், சீனா அதை மறுத்துள்ளது.

Prakash J

அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் பகுதியாகும் எனக் கூறி, இந்தியப் பெண்ணின் பாஸ்போர்ட்டை சீன அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சீனா அதை மறுத்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாக இந்தியா சுட்டிக்காட்டியது. சீன வெளியுறவு அமைச்சகம், அதிகாரிகள் சட்டப்படி செயல்பட்டதாக கூறியுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்கெனவே எல்லைப் பிரச்னையில் வாய்க்கால் தகராறு இருக்கும் நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தையும் அது உரிமை கொண்டாடி வருகிறது. இதற்காக முகாம் அமைப்பது, பெயர் சூட்டுவது போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வந்தாலும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெம் வாங் தோங்டாக் என்பவர், கடந்த நவம்பர் 21ஆம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு செல்வதற்காக சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

அப்போது அவருடைய பாஸ்போர்ட்டைச் சோதனை செய்த சீன குடியேற்ற அதிகாரிகள், ‘உங்களுடைய பாஸ்போர்ட்டில், அருணாச்சலப் பிரதேசம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இது செல்லாது. தவிர, அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி’ எனத் தெரிவித்து அவருடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், அதுதொடர்பாக தன்னைக் கேலி செய்ததாகவும், அதனால் தமக்கு இழப்பு ஏற்பட்டதாகவுm, இதுதொடர்பாக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த சம்பவம் வைரலான நிலையில் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, இந்த சம்பவத்தால் தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், இது சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகவும், இந்திய குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் விளைவிப்பதாகவும் கூறினார். அதேபோல், இந்தியாவும் சீனாவைக் கண்டித்தது. அது, ”அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதன் குடியிருப்பாளர்கள் இந்திய பாஸ்போர்ட்களை வைத்திருக்கவும் பயணிக்கவும் முழு உரிமை உண்டு” என வலியுறுத்தியது. இந்த நிலையில், அவருடைய கூற்றை சீனா மறுத்துள்ளது. மேலும், சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியது

பெமா காண்டு

இந்தச் சம்பவம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், "அவர் எந்தவொரு கட்டாய நடவடிக்கைகளுக்கும், தடுப்புக்காவலுக்கும் அல்லது துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்படவில்லை. எல்லை அதிகாரிகள் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படியே செயல்பட்டனர். விமான நிறுவனம் ஓய்வெடுக்க இடம், உணவு மற்றும் தண்ணீரை வழங்கியது” என்றார். மேலும் அவர், “ஜங்னான் (அருணாச்சல்) என்பது சீனாவின் ஒரு பிரதேசம். இந்தியாவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.